அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு நடிகர் விஜய் பரிசு மற்றும் உதவி தொகை வழங்குகிறார்!

அரசியலில் கால் பதிக்கும் நோக்கத்தோடு, அடுத்தடுத்த நடவடிக்கைளை அதிரடியாக மேற்கொண்டு வரும் நடிகர் விஜய், அதன் தொடர்ச்சியாக, பள்ளிப் பொதுத் தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவ – மாணவிருக்கு பரிசு மற்றும் கல்வி உதவித் தொகைகள் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறியதாவது: பிளஸ் 2 தேர்தவில், 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு, திண்டுக்கல் மாவட்ட இயக்கத்தினர், நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த தேர்வில், கல்வி மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களை கைப்பற்றிய மாணவ – மாணவியரின் பட்டியலை சேகரிக்க, எங்கள் இயக்க பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் நகல், ‘ஆதார்’ அட்டை நகல், மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்கு அட்டை நகல் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றையும் சேகரித்து, வரும் 20ம் தேதிக்குள், சென்னை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அடுத்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின், அவர்களின் விபரங்களையும் திரட்டி, வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும், விஜய் அளிக்கும் உதவிகள் சேரும் வகையில், இந்த நிகழ்ச்சி திட்டமிடப்படுகிறது.

ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவியர் தலா மூன்று பேர் வீதம், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ – மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை வழங்க, விஜய் திட்டமிட்டுள்ளார்.

இதற்கான நிகழ்ச்சி, அடுத்த மாதம், சென்னை அல்லது திருச்சியில் நடத்தப்பட உள்ளது. அங்கு , மாணவ – மாணவியருக்கு, தன் கையால் உதவித் தொகைகளை, விஜய் வழங்க உள்ளார்.

சமுதாய தலைவர்கள் பிறந்த நாள் விழா, தலைவர்கள் சிலைக்கு மரியாதை என, விஜய் மக்கள் இயக்கத்தினர், கடந்த சில மாதங்களாக, அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக,  விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு  மிகவும் வலிமை சேர்க்கும்  வகையில், மாணவ – மாணவியரின் ஆதரவை பெறும் நோக்கில், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.