டக்கர் – விமர்சனம்.
வாழ்க்கையில் எப்படியாவது பணக்காரனாக ஆகிவிட வேண்டும் என்பது, குணசேகரனின் (சித்தார்த்) ஆசை. இதற்காக சென்னைக்கு வருகிறார். சென்னையில் பென்ஸ் கார்களை வாடகைக்கு விடும் சைனீஷ் தாதா ஒருவரிடம் டாக்ஸி டிரைவராக வேலை செய்கிறார்.
இந்நிலையில், ஆள்கடத்தும் தாதா ராஸ் (அபிமன்யு சிங்) ஆட்களுடன் ஏற்படும் ஒரு கார் ஆக்ஸிடென்ட் மோதலில் சண்டை ஏற்படுகிறது. அவர்களை தாக்கி விட்டு அவர்களிடமிருந்த ஒரு காரை எடுத்துக் கொண்டு வந்து விடுகிறார்.
குணசேகரன் (சித்தார்த்) எடுத்து வந்த காரில் தாதா ராஸால் (அபிமன்யு சிங்) கடத்தப்பட்ட தொழிலதிபரின் மகள் லக்கி (திவ்யன்ஷா கௌஷிக்) இருக்கிறார். ராஸ், அவரது அடியாட்கள் இவர்களை துரத்துகிறார்கள்.
இந்நிலையில் குணசேகரன் (சித்தார்த்), (லக்கி) திவ்யன்ஷா கௌஷிக் இருவருக்கும் நெருக்கம் ஏற்படுகிறது. இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை சுவாரசியமில்லாத திரைக்கதையால் சொல்லியிருக்கிறார், இயக்குநர் கார்த்திக் ஜி. க்ரிஷ்.
குறுந்தாடியுடன் காணப்படும் சித்தார்த் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார். ஆனால், இவரது கதாபாத்திரம் எந்த வித்தியாசமுமின்றி இருப்பதால், ரசிக்க முடியவில்லை.
திவ்யன்ஷா கௌஷிக் நடிப்பதை காட்டிலும், கவர்ச்சி காட்டுவதில் அக்கறை எடுத்துள்ளார்.
காமெடி கதாபாத்திரங்களில் யோகி பாபு, விக்னேஷ் காந்த், முனீஸ்காந்த். இவர்களில் விக்னேஷ் காந்த், முனீஸ்காந்த் இருவரும் கொலையாய், கொல்லுகிறார்கள். இதில் யோகி பாபு, சில இடங்களில் சிரிக்க வைத்து, ஆறுதல் படுத்துகிறார்.
அபிமன்யு சிங் பெரிதாக கவரவில்லை.
அப்பாவி குணசேகரன் (சித்தார்த்), திடிரென ஆக்ரோஷமாக எப்படி மாறுகிறார், என்பது புரியவில்லை. இவருடைய கதாபாத்திரம் உள்ளிட்ட, எந்த கதாபாத்திரமும் உணர்வு ரீதியாக ரசிகர்களிடம் எந்த தாக்கத்தினையும் ஏற்படுத்தவில்லை. யூகிக்க முடியும் காட்சிகளால் ரசனையும் ஏற்படவில்லை.
படம் ஆரம்பித்த முதலில் விறுவிறுப்பாய் ஆரம்பித்தாலும் அதன் பிறகு வரும் காட்சிகள் ஜவ்வாய் இழுக்கிறது.
மொத்தத்தில், எந்தவித வித்தியாசமுமில்லாமல் ‘டக்கர்’ அப்பிட்டாகி விட்டது!