பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்திருக்க, அவருடன் ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘தண்டட்டி’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார்.
‘தண்டட்டி’ படத்தில் பசுபதி, ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் சினிமாவிற்கு அறிமுகம் இல்லாத, மதுரையை சேர்ந்த சிலரும் நடித்துள்ளனர்.
‘தண்டட்டி’ ஒரு வகையான காதணி. இதை அணிவதற்கு பல வருடங்கள் காத்திருக்க வேண்டும். மதுரை சுற்று வட்டாரங்களில் ‘தண்டட்டி’ என்றும், பிற பகுதிகளில் ‘பாம்படம்’ என்றும் அழைக்கப்படும். ‘தண்டட்டி’, ‘பாம்படம்’ இந்த இரண்டு காதணிகளிலும் பலவகை உண்டு.
தென் தமிழ்நாட்டில், சில சமூகத்தின் பாரம்பரியமாகவும், அடையாளமாகவும் இருந்த, ‘தண்டட்டி’ யை மைய்யப்படுத்தி உருவாகியிருக்கும், இந்தப்படம் எப்படி இருக்கிறது?
கிடாரிப்பட்டி கிராமம், போலீஸூக்கு அடங்காத ஒரு வில்லங்கமான கிராமம். இந்த கிராமத்தில் நடக்கும் எல்லாவிதமான பிரச்சனைகளையும், ஊர் பஞ்சாயத்தே பேசி முடித்துக்கொள்ளும். மீறி ஏதாவது காரணத்திற்காக போலீஸ் உள்ளே வந்தால், அந்த போலீஸின் நிலைமை அதோகதி தான். இப்படியான அந்த கிராமத்திற்கு, ரிட்டையர்டு ஆக சில நாட்களே உள்ள நிலையில் டிரான்ஸ்பரில் வருகிறார், போலீஸ் கான்ஸ்டபிள் பசுபதி.
இந்நிலையில் கிடாரிப்பட்டியை சேர்ந்த சிறுவன், தனது அப்பத்தாவை (ரோகினி) காணாமல் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுக்கிறான். அந்த புகாரை யாரும் வாங்காத நிலையில், பசுபதி அந்த புகாரை வாங்குகிறார். சக போலீஸார், அந்த கிராமம் குறித்து எச்சரிக்கிறார்கள். அதை மீறி அந்த சிறுவனுடன் அவர் செல்கிறார்.
பல இடங்களில் சிறுவனின் அப்பத்தாவை (ரோகினி) தேடி அலையும் பசுபதி, அவரை இறந்த நிலையில் கண்டுபிடிக்கிறார். சிறுவனின் வேண்டுகோளுக்கினங்க அவரின் இறுதிச் சடங்கு வரை, பசுபதி இருக்க நேர்கிறது. இந்நிலையில் அப்பத்தாவின் (ரோகினி), காதில் இருந்த ‘தண்டட்டி’ காணாமல் போகிறது. இதனால், ரோகினியின் மகன் விவேக் பிரசன்னா, பசுபதியை அரிவாள் முனையில் சிறை பிடிக்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது, என்பது தான் ‘தண்டட்டி’ படத்தின் கதை.
நேர்மையான, கண்டிப்பான மனிதாபமிக்க போலீஸ் கான்ஸ்டபிளாக பசுபதி. கதாபாத்திரத்திற்கேற்ற பொருத்தமான தேர்வு. ரோகிணி, நடிப்பதற்கு காட்சிகள் குறைவு. என்ற போதிலும் கிடைத்த காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸில் பசுபதி இவரின் கையை பிடித்து ‘ஏய்…, தங்கம்..’ என கூப்பிட்டவுடன் திரும்பி பார்க்கும் ரோகிணி அந்த சில நொடிகளில் மனம் நிறைகிறார். இருவருக்குமான சிறப்பான காட்சி. மனம் நெகிழும் காட்சி!
விவேக் பிரசன்னா, ரோகிணியின் குடிகார மகனாக நடித்து படத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார். அவருடைய பாடி லாங்குவேஜும், மதுரை வட்டாரப் பேச்சும் சிறப்பு. அரிவாள் முனையில் பசுபதியைப் போட்டு புரட்டி எடுத்து இருக்கிறார்.
அம்மு அபிராமி கிடைத்த காட்சிகளில் சிறப்பாக நடித்து இருக்கிறார்.
எளவு வீட்டில் சாப்பாட்டிற்கு ரகளை செய்யும் சொந்தக்காரர், கிளவிகளின் ஒப்பாரியின் ஊடே வரும் நக்கல்கள் என, மதுரை வட்டார வாசனை அபாரம்.
ஒளிப்பதிவும், இசையும் சிறப்பு.
படம் முழுவதும் ஆங்காங்கே ஏற்பட்ட தொய்வுகளை இயக்குநர் கவனித்து இருக்கலாம்.
சில குறைகள் இருந்த போதும், ‘தண்டட்டி’ மண்வாசனை வீசுகிறது.