திரைப்படங்களில் சாதி வெறி ! “ராயர் பரம்பரை” பட விழாவில் கே.ராஜன் பரபரப்பு பேச்சு!!

சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத் டி இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ராயர் பரம்பரை”. 

இப்படத்தில் கஸ்தூரி, KR விஜயா, RNR மனோகர், பாவா லக்‌ஷ்மணன், ஷேஷு, பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் ஜூலை 7ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  நடைபெற்றது.

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது…
ஒரு நல்ல படம் என்பது டிரெய்லரிலேயே தெரிகிறது. பாட்டு, ஃபைட், காமெடி என எல்லாமே நன்றாக இருக்கிறது. கிருஷ்ணா அட்டகாசமாக நடித்திருக்கிறார். இது சின்ன படம் இல்லை நிறையச் செலவு செய்திருக்கிறார்கள், இது பெரிய படம். இப்போது நிறைய படங்கள் ஜாதி வெறியைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. அந்த சமூகத்திற்குப் பாதிப்பு என ஜாதி வெறியைத் தூண்டுகிறார்கள். ஆனால் இந்த படத்தில் மதம் பற்றி நல்ல விசயத்தைக் காட்டுகிறார்கள். முஸ்லீம் பெண்ணை காப்பாற்ற இந்து கடவுளின் வேலை தூக்கி வருகிறான் நாயகன். இப்படி நல்ல விஷயங்களை காட்டுங்கள், யாரும் மத வெறியைத் தூண்டாதீர்கள். ஒரு படம் வெற்றி பெறத் தயாரிப்பாளர் தான் காரணம் இயக்குநர் கலைஞர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். 

இயக்குநர் ராம்நாத் T பேசியதாவது,
நாம் ஒரு கதையை எவ்வளவு சிரமப்பட்டு எழுதினாலும் கதாநாயகன் சரியாக அமையவில்லை என்றால் படம் நிற்காது, கிருஷ்ணா ஒரு நல்ல நடிகர் அவரது கண்ணில் ஒரு உயிர் உள்ளது, இந்தப் படத்தை நான் உருவாக்க காரணம், நான் கண்ட ஒரு உண்மை சம்பவம். ஒரு சமுதாயக் கோபம் எனக்கு உள்ளது அது தான் இந்தப் படம் உருவாக காரணம், கதாநாயகன் எனக்கு மிகவும் நெருக்கமாகி விட்டார் , இசையமைப்பாளருக்கு மீண்டும் இந்தப் படம் ஒரு அடையாளத்தை அளிக்கும், படம் நன்றாக வந்துள்ளது கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் .

நடிகர் ஆனந்த்ராஜ் பேசியதாவது,
மறைந்த நடிகர் மனோவிற்கு முதலில் என் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன், இந்தப்படம் சிறிய படம் இல்லை, ஒரு நல்ல பெரிய படம் , தயாரிப்பாளர் படத்திற்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார், இந்தப் படம் ஜாதி மதம் பேசுகிற ஒரு ஜாலியான படம், யாரையும் தாழ்த்தி பேசாத ஒரு நல்ல படம், 

தயாரிப்பாளர் சின்னசாமி பேசியதாவது,
நான் நடிக்க ஆசைப்பட்டு வந்தேன், ஆனால் என்னை யாரும் ஆதரிக்கவில்லை. அதனால் 10 வருடம் கஷ்டப்பட்டு உழைத்து இந்தப் படத்தைத் தயாரித்து அதில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன், நான் யாருக்கும் சமரசம் செய்யாமல் இந்த படத்திற்கு தேவையானதைச் செய்துள்ளேன், படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். 

நடிகர் கிருஷ்ணா பேசியதாவது…
கொரோனா முடிந்தவுடனே நான் ஒப்பந்தமான படம் இது தான். ஃபுல் ஹீயூமர் படம், நான் முன்பு இந்த மாதிரி பண்ணியதில்லை. இயக்குநரை நம்பி தான் களம் இறங்கினேன். இயக்குநர் கேப்டன் என்றாலும் கப்பல் சின்ன சாமி சார் தான் அவருக்கு நன்றி. எல்லா படத்திற்கும் உங்கள் ஆதரவு இருந்துள்ளது, அதே போல் இந்தப் படத்திற்கு ஆதரவு தாருங்கள். நாயகி எல்லா ஜவுளிக்கடை போட்டோவிலும் இவர் படம் தான் இருக்கும், நல்ல மாடல் நன்றாக நடித்துள்ளார். படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள் நன்றி.