பிரபு தேவா நடிப்பில், ஹிப்னாடிக் உளவியல் திரில்லராக உருவான ‘வுல்ப்’ !

வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா, அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர் ஜே ரமேஷ் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஹிப்னாடிக் உளவியல் திரில்லரான ‘வுல்ஃப்’ படத்தின் மூலம் கன்னட திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்க உள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகி உள்ள நிலையில், டீஸர் ஆகஸ்ட் 3 அன்றும் பிரபுதேவாவுக்காக அம்ரேஷ் இசையில் விஜய் சேதுபதி பாடியுள்ள பாடல் ஆகஸ்ட் 16 அன்றும் வெளியாகிறது.

இப்படத்தின் தயாரிப்பாளர் சந்தேஷ் நாகராஜ் கர்நாடகாவில் பிரபல தொழிலதிபர், அரசியல்வாதி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய விருது பெற்ற தயாரிப்பாளரான சந்தேஷ் நாகராஜ், சிவராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமார் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் உட்பட சுமார் 30 கன்னட படங்களை தயாரித்துள்ளார்.

‘வுல்ஃப்’ படத்தை பற்றி இயக்குநர் வினோ வெங்கடேஷ் கூறுகையில், “இப்படம் வரலாற்று காலத்திலிருந்து இன்றுவரை பயணிக்கும். அறிவியல் புனைக்கதை திரைப்படமான இதில், திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகள் இடம் பெற்றிருக்கும். புதுச்சேரி, சென்னை, பெங்களூரு, அந்தமான் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது, “படத்தின் வில்லன் மற்றும் கதாநாயகன் இருவரும் ஓநாயின் குணாதிசயங்களைக் கொண்டிருப்பார்கள். எந்த ஓநாய் வெற்றி பெறுகிறது என்பதுதான் கதையின் கரு” என்றார்.

வுல்ஃப் படத்தின் ஒளிப்பதிவை அருள் வின்சென்ட்மேற்கொள்ள, அம்ரேஷ் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் விஜய் சேதுபதி பாடிய பாடல் வரும் ஆகஸ்ட் 16 அன்றும் வெளியாகிறது.