நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘வேட்டையன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் கடப்பாவில் தொடங்கியுள்ளது
இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் விஜயவாடா புறப்பட்டு சென்றார்.
அப்போது நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:”நான் இப்போது விஜயவாடாவுக்கு சென்று, அங்கிருந்து ஹைதராபாத்திற்கு செல்கிறேன்.
திரைப்பட படப்பிடிப்பிற்காக செல்கிறேன்.
லால் சலாம் படம் நன்றாக சூப்பராக வந்திருக்கிறது. அந்தப் படத்தை நீங்கள் பாருங்கள். அந்தப் படம் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் படமாக இருக்கும்.
உங்களுடைய மகள் ஐஸ்வர்யா, எனது அப்பா சங்கி அல்ல எனக் கூறியது குறித்து, உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு,
சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று, எங்குமே கூறப்படவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி. எல்லா மதங்களையும் விரும்புகிறவர். அவரை ஏன் அப்படி எல்லாரும் கூறுகிறார்கள்? என்பது எனது மகளின் பார்வை.
அப்பா சங்கி அல்ல என்பது, அவருடைய கருத்து.
உங்களுடைய திரைப்படம் நன்றாக ஓடுவதற்காக, அதைப்போல் மகள் பேசுவதாக கூறப்படுகிறதே?
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.