நடிகை ஜெயசுதா மகன் நிஹார் நடிப்பில் உருவான ‘ரெக்கார்ட் பிரேக்’ !

ஸ்ரீ திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் தயாரிப்பில் நிஹார், நாகர்ஜூனா, ராக்தா இஃப்திகர் நடித்திருக்கும் படம் ‘ரெக்கார்ட் பிரேக்’. மார்ச் 8 அன்று இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நடிகர் நிஹார், “இது என்னுடைய இரண்டாவது படம். கடந்த ஐந்து வருடங்களாக இந்த படத்திற்காக நாங்கள் கடுமையாக உழைத்து உள்ளோம். விஎப்எக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும் என விரும்புகிறோம். அதனால் தான் தெலுங்கு உட்பட எட்டு மொழிகளில் இந்த படத்தை டப்பிங் செய்திருக்கிறோம். பெரிய திரையில் பார்க்கும்பொழுது அதன் அனுபவத்தை உங்களால் உணர முடியும். யாரும் இல்லாதவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக அவர்களால் சாதிக்க முடியும் என்பதை இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். உங்களுக்கும் படம் பிடிக்கும்”.

இயக்குநர், தயாரிப்பாளர் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ்  பேசியதாவது, “சென்னை விஜயா கார்டனில்தான் எனது சினிமா வாழ்க்கைத் தொடங்கியது. யாரும் இல்லாத கதாநாயகன் சிறுவயதிலிருந்து கிடைக்கும் வேலைகளை கஷ்டப்பட்டு செய்து வருகிறான். ஆனால், அவன் வளர்ந்து ஒரு விளையாட்டு ஆர்வத்துடன் போகும் பொழுது என்ன நடக்கிறது என்பதுதான் கதை. மனிதர்களாக நாம் அனைவரும் இங்கு சமம். படத்தின் கதை மீது எனக்குப் பெரிய நம்பிக்கை உண்டு. அதை நீங்கள் திரையரங்குகளில் பார்க்கும்போது உணர்வீர்கள். இந்த படத்தை எனக்கு பிடித்த தமிழ் மக்களுக்கும் காட்டுவது ரொம்ப சந்தோஷம். மார்ச் எட்டு அன்று திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.