‘எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ஆர்.ராகேஷ் இயக்கியிருக்கும் படம், சாமானியன். இதில், ராமராஜன், ராதாரவி, எம். எஸ். பாஸ்கர், போஸ் வெங்கட், மைம் கோபி, கே. எஸ். ரவிக்குமார், நக்ஷா சரண், லியோ சிவகுமார், ஸ்மிருதி வெங்கட், அபர்னதி, தீபா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ராமராஜனை ‘மக்கள் நாயகன்’ என்று அவரது ரசிகர்களும், பிற நடிகர்களின் ரசிகர்கள் அவரை, ‘டவுசர்’ என பட்டப்பெயர் வைத்து அழைத்தனர். 1990களில், பாக்ஸ் ஆஃபிசில் தொடர்ந்து பட்டையை கிளப்பி வந்த ராமாராஜனின் படங்கள், ரஜினி போன்ற உச்சபட்ச நடிகர்களையும் கலங்கடித்தன. இன்றைக்கும் அவரது ரசிகர்கள் துடிப்புடனே இருந்து வருகின்றனர்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு,’ சாமானியன்’ படத்தின் மூலம், ‘மக்கள் நாயகன்’ ராமராஜன் என்ட்ரி கொடுத்துள்ளார். அவரது என்ட்ரி, அவரின் ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்துள்ளதா? பார்க்கலாம்.
தன்னுடைய பேத்தியின் பிறந்த நாள் விழாவுக்காக, நண்பன் எம். எஸ். பாஸ்கருடன் சென்னை வருகிறார், ராமராஜன். இருவரும் மற்றொரு நண்பர் ராதாரவியின் வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்து விட்டு, எம் எஸ் பாஸ்கர் அவரது மகள் வீட்டுக்கு செல்ல, ராமராஜன் ஒரு பேங்கிற்கு செல்கிறார். அந்த பேங்கினை கொள்ளையடிக்க, இளைஞர்கள் சிலர் திட்டமிடுகின்றனர். இதற்கிடையே, வெடிகுண்டு, துப்பாக்கி முனையில் ராமராஜன் அந்த பேங்கினை, தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருகிறார். ராமராஜன் எதற்காக இதை செய்கிறார். என்பது தான், சாமானியன் படத்தின் கதை.
ராமராஜனை நீண்ட இடைவெளிக்குப் பிறகு, திரையில் பார்க்கும் அவரது ரசிகர்கள், விசில் அடித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். கார் விபத்திற்கு பிறகு, அவரது உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் நன்றாக தெரிகிறது. அவரது உடல் நிலைக்கு ஏற்றவாறு, கதையமைக்கப்பட்டிருந்தாலும், ஒளிப்பதிவாளர் சிரத்தையோடு, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியிருக்க வேண்டும். ஏனோ, விட்டுவிட்டார்!?
நடிப்பினை பொறுத்தவரை, ராமராஜன் குறை சொல்ல முடியாத அளவில் நடித்துள்ளார். மகளின் மேல் அதீத அன்பு கொண்ட அப்பாவாக நடித்து ரசிகர்களை தன்வசப்படுத்தி விடுகிறார். தாய்மார்கள் சில இடங்களில் கண் கலங்குவர். க்ளைமாக்ஸில், கடன் குறித்து பேங்கிற்கும், அதன் வாடிக்கையாளருக்கும் உள்ள உறவு பற்றியும், கடன் வாங்குவது குறித்த விழிப்புணர்வு பேச்சும் சூப்பர்.
சொந்த வீடு வாங்கும் இளம் தம்பதியர்களாக, லியோ சிவக்குமார் – நக்ஷா சரண் இருவரும், நன்றாக நடித்துள்ளனர். கடன் வசூலிக்க வரும் நபர்களின் பேச்சால், மனம் கூனி நிற்கும் காட்சிகளில் இருவருமே நன்றாக நடித்துள்ளனர்.
ராமராஜனின் நண்பர்களாக நடித்திருக்கும் எம். எஸ். பாஸ்கர், ராதாரவி ஆகியோர் தங்களது அனுபவமிக்க நடிப்பால், கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.
படத்தின் முதல் பாதியில் சற்று சோர்வு ஏற்படுகிறது. இரண்டாம் பாதியில், குடும்ப உறவுகள் நண்பர்களுக்குள் இருக்கும் நெருக்கம், எமோஷனல், சென்டிமென்ட் என திரைக்கதை அழுத்தமாக நகர்கிறது, பெண்கள் விரும்பும் காட்சிகளாக.
ஆபாசம், வன்முறை வெறியாட்டம், போதை வஸ்த்துக்கள் இல்லாத சாமானியன் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்.




