‘PT சார்’ – விமர்சனம்!
‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிப்பில், ஹிப் ஹாப் ஆதி, கஷ்மிரா பர்தேசி இருவரும் இணைந்து நடித்திருக்க, இவர்களுடன் அனிகா சுரேந்திரன், பிரபு, இளவரசு, கே. பாக்யராஜ், தியாகராஜன், பட்டிமன்றம் ராஜா, தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ள படம், ‘PT சார்’. எழுதி இயக்கியிருக்கிறார், கார்த்திக் வேணுகோபாலன்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிரபலமான, தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் தியாகராஜன். இவரது பள்ளி ஒன்றில், ஹிப் ஹாப் ஆதி ‘PT’ வாத்தியாராக பணியாற்றுகிறார். அதே பள்ளியில் பணியாற்றும் கஷ்மிரா பர்தேசியை காதலிக்கிறார்.
ஹிப் ஹாப் ஆதியின் ஜாதகத்தில் ‘அடிதடி’ கண்டம் இருப்பதால், அவரது அம்மவான தேவதர்ஷினி, ஆதியை எந்த விவாகரத்திற்கும் செல்லாமல் வளர்த்து வருகிறார். இவர்களின் எதிர்வீட்டில் குடியிருக்கும் அனிகா சுரேந்திரனுக்கு, கல்வி நிறுவனங்களின் தாளாளர் தியாகராஜனால் பாலியல் ரீதியான பிரச்சனை ஏற்படுகிறது. இதன் காரணமாக தற்கொலை செய்ய முயற்சிக்கும் அனிகாவை, ஆதி காப்பாற்றுகிறார். இதனால், தியாகராஜனுக்கும் ஆதிக்கும் மோதல் வெடிக்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான், ‘PT சார்’.
ஹிப் ஹாப் ஆதி, PT வாத்தியார் கதாபாத்திரத்தில், கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சிறுவர்களுடன் அடிக்கும் லூட்டியின் போதும், இங்கிலீஷ் டீச்சர் கஷ்மிரா பர்தேசியின் பின்னர் சுற்றும் போதும் கலகலப்பினை ஏற்படுத்துகிறார். அதேபோல் அடிதடி காட்சிகளிலும் தூள் கிளப்புகிறார்.
ஹிப் ஹாப் ஆதியின் காதலியாக நடித்திருக்கும் கஷ்மிரா பர்தேசிக்கு வழக்கமான பாட்டுபாடி ஆடும் கதாபாத்திரம். அவரும் அதை சிறப்பாகவே செய்திருக்கிறார்.
அனிகா சுரேந்திரன், கதையின் மைய்யக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளைஞர்கள் செய்யும் பாலியல் துன்புறுத்தலுக்கு பிறகு, அவர் பெற்றோர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து, அவர் எதிர்கொள்ளும் விதம் பாராட்டப்பட வேண்டியது. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது. கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து, நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். சமூகத்தை நோக்கி அவர் வைக்கும் கேள்விகள், சூப்பர்.
அனிகா சுரேந்திரனின் அப்பாவாக நடித்திருக்கும் இளவரசு, தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்.
கல்வி நிறுவனங்களின் தாளாளராக நடித்திருக்கும் தியாகராஜன், மெஜெஸ்டிக்கான லுக்! பார்வையினாலேயே மிரட்டியிருக்கிறார்.
பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆட்படுபவர்கள் குறித்த, சமூகத்தின் பார்வையை மாற்ற, போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்த, முயற்சித்திருக்கும் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன், பாராட்டப்பட வேண்டியவர். அனிகா சுரேந்திரன் மூலமாக, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சமூகம் ஏற்படுத்தும் அழுத்தத்தினை சிறப்பாக படமாக்கியுள்ளார்.
அதே வேளையில், ராகுல் கதாபாத்திரத்தில் வரும் சிறுவன், ஹிப்ஹாப் ஆதிக்கு போட்டியாக கஷ்மிரா பர்தேசியை காதல் செய்வது போன்ற காட்சியால், மொத்த படமும் அதன் கன்னித் தன்மையை இழந்து விடுகிறது. அதற்கு சப்பை கட்டும் விதமாக, சண்டைக்காட்சியில் சிறுவனின் அம்மா பேசும் வசனம் ஏற்றுக்கொள்ள முடியாதது.
அதேபோல் நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கே பாக்யாரஜின் கதாபாத்திர வடிவமைப்பும், அவர் சொல்லும் தீர்ப்பும் (குற்றம் செய்த சிலரை விடுவித்தது) அபத்தமானது.
க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் சூப்பர்!
ஒளிப்பதிவு, இசை இரண்டும் படத்தின் பலம்.
‘PT சார்’ – வரவேற்கப்பட வேண்டியவர்.