கங்கனா ரணாவத்துக்கு கன்னத்தில் ‘பளார்’ கொடுத்த பெண் காவலருக்கு திரையுலகில் பெருகும் ஆதரவு! வேலைக்கும் உத்தரவாதம்!!
சண்டிகர் விமான நிலையத்தில்,தேசிய பாதுகாப்புப்படை பெண் காவலர் குல்விந்தர் கவுர், நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் அறைந்ததாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதற்கு விவசாயிகளுக்கு எதிராக கங்கனா தெரிவித்த கருத்துகளே காரணம் என்ற தகவலும் வெளியானது.இதனையடுத்து கங்கனாவுக்கு ஆதரவாக ஒரு தரப்பும், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சிஐஎஸ்எஃப் பெண் காவலருக்கு ஆதரவாக ஒரு தரப்பும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான விஷால் தத்லானி ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் , “நான் வன்முறையை ஆதரிப்பது இல்லை. ஆனால் நிச்சயமாக அந்த காவலரின் தனிப்பட்ட கோபத்தின் தேவையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவருக்காக வேலை காத்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் உறுதியளிக்கிறேன்.ஜெய்ஹிந்த். ஜெய்ஜவான். ஜெய் கிசான்” என விஷால் தத்லானி பதிவிட்டுள்ளார்.
இவ்விவகாரத்தில் இயக்குநர் சேரன் தனது ‘எக்ஸ்’தள பக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,”இந்த பெண்மணியின் கோபத்தில் நியாயம் இருப்பதாக பார்க்கிறேன்.. அந்த அடி, நடிகைக்காகனதல்ல. வாக்களித்த மக்களுக்கானது..
விவசாயிகளின் உணர்வு தெரியாமல் பேசிய அந்த வார்த்தைகளுக்கு பின்னும் இந்த கவர்ச்சிக்கு ஓட்டு விழுகிறது என்றால்.. மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. ‘ஹாட்ஸ்ஆப்’ என பதிவிட்டுள்ளார்