டிமாண்டி காலனி .(விமர்சனம்.) உயிர் போன பின்னர் உடல் வாழுமா ?

திகில் படங்களில் வித்தியாசமாக வெளியாகி இருந்த படம்தான் ‘டிமாண்டி காலனி ‘ . அதனுடைய தொடர்ச்சியாக வெளி வந்திருக்கிறது ‘டிமாண்டி காலனி 2. ‘
தொடர்ச்சி எப்படி இருக்கிறது? முதல் பாகத்தில் உயிரிழந்த கேரக்டர் 2 ம் பாகத்தில் உயிருடன் வாழ்வது எப்படி சாத்தியமாகும் ?இயக்குநர் அஜய் ஞானமுத்து சரியான விடை சொல்லியிருக்கிறாரா ,?
சொல்லியிருக்கிறார். சொன்னதுடன் நிற்காமல் இன்னொரு உடன் பிறப்பையும் கொண்டு வந்திருக்கிறார்.
அப்படியா என வியப்படைவதற்கு படத்தில் சில அதிசயங்கள் நடக்கின்றன.
நாயகனாக நடிக்கிறபோது கிடைக்கிற ஆதரவு ,பெயர் ,சற்றே வில்லன் சாயலுடன் நடிக்கிறபோது கிடைக்குமா? அது அருள்நிதிக்கு சாத்தியமாகி இருக்கிறது.இரட்டை வேடம். அசத்தியிருக்கிறார் அருள்நிதி.
நாயகியாக பிரியா பவானி சங்கர். விசிட்டிங் புரபசர் மாதிரி வந்து போகவில்லை. கதையுடன் இணைந்து பயணிக்கிற வேடம். பொருந்திப் போகிறார் ,சிறப்புடன் நடித்திருக்கிறார். பட உலகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தொங்கு சதை மாதிரி அருண்பாண்டியன். மற்றும் முத்துக்குமார், அர்ச்சனா ,செரிங் டோர்ஜி என்கிற சீனர் ஆகியோரை நன்றாக பயன் படுத்தியிருக்கிறார்கள்.
பேயாடியது மாதிரி இருக்கிறது பின்னணி இசை.சாம். சி. எஸ் , க்கு என்ன நேர்ந்தது? கதை புரிந்து களமாடி இருக்க வேணாமா மியூசிக் டைரக்டர்.
ஒளிப்பதிவாளர் ஹரீஷ்கண்ணன், இயக்குநரின் எண்ணங்களுக்கு தில் கோலம் போட்டிருக்கிறார் . திகிலாக இருக்கிறது. சிறப்பு.
ஆவிக் கதைகளில் பல நீராவியாகி போனதுண்டு . பார்த்திருக்கிறோம். ஆனால் இதில் புதிய நிகழ்வுகளை இணைத்து நவீன கோணத்தில் பார்க்க வைத்திருக்கிறார் அஜய் ஞானமுத்து , வாழ்த்தலாம் .
புத்தர் வழிபாடு,சீனத் துறவி ,போர்த்துக்கீசியர் போன்றவர்களை இதுவரை ஆவி படங்களில் பார்த்ததில்லையே.!
இன்னொரு பாகமும் இருக்கிறது என்பதை எப்படி எதிர்கொள்வார்களோ ரசிக கண்மணிகள்.
–தேவிமணி.