வாழை .( விமர்சனம்.) சிறந்த படம் . சிறப்புகள் சேர்க்கிறது.

தன்னை முதன்மையாக படைக்கச் சொல்லி பெயர் ‘வாங்க ‘துடிக்கிற திரை உலகத்தில் இரண்டு பொடியன்களை முன் நிறுத்தி பெயர் ‘பெற்று’ இருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரது  வாழ்வியல் கதை சாதாரணமானது இல்லை.ரணம் மிகுந்தது என்பதை உயிர் கசிய படைத்திருக்கிறார். வாழ்த்துவோம் . அசல் வாழ்க்கையை நகாசு பூசாது வெண் திரையில் காட்டியதற்கு.!

ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலிகளை சொல்லுகிறேன் என வன்முறையை மட்டுமே பதிவு செய்கிறவர்கள் மத்தியில் அந்த சமூகத்தின் அடித்தள வாழ்க்கையை , வறுமையின் வேர்  எங்கிருக்கிறது என்பதைக்  காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ். மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லாமல் பலர் படிக்கவேண்டிய பாடம். 

திருநெல்வேலி மாவட்டத்தில்   புளியங்குளம்  கிராமம். வறுமையின் பிறப்பிடமாக ஒரு சமூகம் அங்கு வாழ்கிறது . வாழை சுமந்து வருகிற வருவாயில் வாழ்க்கையை நகர்த்தும் ஏழ்மையின் செல்லப்பிள்ளைகள் . வாழ்க்கையின்  உரிமை தேடிய  போராட்டத்தில் உயிரை இழக்கிறார் குடும்பத்தலைவர்., பருவம் வந்த  மகள், பள்ளி செல்லும் சிறுவன் என இருவரை வைத்துக்கொண்டு பசியின்றி வாழ  ஒரு தாய் வதங்குகிறாள் .அவர்களின் வாழ்க்கையை மிகைபடாமல் பதிவு செய்திருக்கிற படம்தான் ‘வாழை’.

பொன்வேல், சேகர் ஆகிய இரு சிறுவர்களே வாழையின் நாயகர்கள். ஒருவன் கமல் ரசிகன். மற்றவன் ரஜினியின் ரசிகன் . என்றாலும் அந்த ரசனையை முதன்மைப் படுத்தவில்லை மாரி செல்வராஜ். வாழை சுமக்கும் வலியை ,கல்வியும் கை கொடுக்காத  வறுமையை , ஆசையை ,பாசத்தை ,அந்த சிறுவர்கள் இருவரும் பாசாங்கு இல்லாமல் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பால் மாடு காணாமல் போனதும் நொருங்கிப்போகிற அந்த சிறுவன் ,அது விலை போய்விட்டது என்பது தெரிந்ததும் துடிக்கிற துடிப்பு எந்த பெரிய நடிகர்களாலும் நகலெடுக்க முடியாத வெளிப்பாடு அய்யா!

 ஆசிரியை நிகிலா விமல் மீது  அந்த பொடியன் வைத்திருந்தது ‘அது’வாகத்தான் இருக்கும்  என்பதாகத்தான் நினைப்பு நிழலாடுகிறது . ஆனால் அம்மா,அக்கா என பொடியன் பொன் வேல்  சுட்டிக்காட்டியதும்  அவன் தங்கம் என உயர்வாகிப்போகிறான் .! ஆனால் நாம்? 

பொன்வேலின்  அக்காவாக திவ்யா துரைசாமி . சக கிராமத்தானாக கலையரசன் . சரியான தேர்வு. கண்ணோடு கண் நோக்கும் அந்த பார்வையில்  உயிர்ப்பு.

அம்மாவாக நடித்திருப்பவர் ஜானகி. விருதுகளுக்கான தேர்வுக்குழுவின் தலைவனாக நான் இருந்தால் இந்த அம்மாவுக்கும் அந்த பொடியன் பொன் வேலுவுக்கும் பரிசுகளை வழங்க அழுத்தம் கொடுப்பேன். ஆனால் அங்கேயும் ‘ஆதிக்க வெறி’ !

ஜே எஸ். கே . சதீஷ் . முதலாளி. படத்தின் தயாரிப்பாளர். செம பொருத்தம்.

தேனி ஈஸ்வர்  ஒளிப்பதிவு ,. சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பு இரண்டும் வாழையின் உயர்வுக்கு துணையாக இருக்கின்றன ,ஒப்பாரி பாடல் சுகமாக இருந்தாலும் ஊடுருவி நிற்பது வரிகள்தான்.

வாழையின் கதை இயக்குநர் மாரி செல்வராஜின் சிறு பிராயத்து வாழ்க்கை. அடித்து துவைக்கப்பட்ட அடிமை வாழ்க்கை . பாசாங்கு இல்லாமல் ,தன்னை உயர்வு படுத்திக்கொள்ளாமல் படமாக்கியிருக்கிற மேன்மை அய்யா நீ உண்மையான படைப்பாளி.

 இந்த சமூகத்தில் முதலாளித்துவம் பல உருவங்களுடன்  நடமாடிக்கொண்டுதான் இருக்கிறது.

வாழை . பார்க்கவேண்டிய படம் . பலருக்குப் பாடம். 

—தேவிமணி.