மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகனும் நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி தமிழில் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நேசிப்பாயா’படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.இவருக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். இவர்களுடன் , பிரபு, சரத்குமார், குஷ்பு, கல்கி கோச்சலின் உட்பட பலர் நடித்துள்ளனர். ‘எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ்’ சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படம் குறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறியதாவது, “இந்தியில் ‘ஷெர்ஷா’ என்ற படத்தை இயக்கினேன். அது ‘கொரோனா’ கால கட்டம் என்பதால் அந்தப் படத்தை முடிக்க சற்று காலதாமதம் ஆகிவிட்டது.தற்போது ‘நேசிப்பாயா’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பி இருக்கிறேன். இது காதல் கதையை கொண்ட படம். என் மனதில் ஒரு கதை இருந்தது. நேரம் வரும்போது இயக்கலாம் என்று நினைத்திருந்த நிலையில்,மும்பையில் ஆகாஷ் முரளியுடனான சந்திப்பு நிகழ்ந்தது. நட்பு ரீதியிலான அந்த சந்திப்பின் முடிவில், அவருக்காக இந்தக் கதையை படமாக்க முடிவு செய்தேன்.
இது காதல் கதை என்றாலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தக் கூடிய ஆக்ஷன், டிராமா திரைக்கதையில் படம் பயணிக்கும். ஆகாஷ் முரளி அறிமுக நடிகர் மாதிரியே தெரிய வில்லை அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். ஆறடி உயரம், கணீர் குரல் என்று ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். அதிதி ஷங்கர், சினிமாத்தனம் இல்லாத பெண்ணாக இருப்பார். அதனால் தான் அவரை நாயகியாகத் தேர்வு செய்தேன். இதில் கல்கி கோச்சலின் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் கதை தமிழ்நாட்டில் தொடங்கி, 90 சதவிகிதம் போர்ச்சுக்கல் நாட்டில் பயணிக்கிறது. கதைப்படி, மொழி தெரியாத ஒரு நாடு தேவைப்பட்டதால் போர்ச்சுக்கல் நாட்டை தேர்ந்தெடுத்து படமாக்கினோம். ஒளிப்பதிவாளராக பிரிட்டிஷை சேர்ந்த கேமரன் எரிக் பிரசன், சண்டை இயக்குநராக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஃபெட்ரிகோ பணியாற்றியுள்ளனர்” என்கிறார்.