இந்தப் படம் ஒரிஜினல் சென்னை மத்திய சிறைச்சாலை . இங்கு பேரறிஞர் அண்ணா , கலைஞர் கருணாநிதி,தேசியத் தலைவர் பிரபாகரன் ,செல்வி ஜெயலலிதா நேபாள மாவோயிஸ்ட் தலைவர் சந்திரா பிரகாஷ் கஜுரோல் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர் . இந்த சிறைச்சாலைதான் சொர்க்கவாசல் திரைப்படத்தின் நிகழ்விடம் .இந்தப் படத்தின்.. ?
இடைவேளை விட்டப்பவே பல வெறுப்புக் குரலை கேட்க முடிந்தது.
“இந்த கேரக்டரில் நடிப்பதற்கு பாலாஜிக்கு என்ன தகுதி இருக்கு?”
“பாக்சர் வடிவேலுவோட கதை. சார்பட்டா பரம்பரை . ஏடிஎம்கே மினிஸ்டர் மதுசூதனின் ரைட் ஹாண்டு . அம்மாவுக்கும் தெரிஞ்ச ஆளு.அப்படி பட்ட கேரக்டர் ல டயர்ல நசுங்கிய மாதிரி மூஞ்சிய வெச்சிருக்கான் ஆர்ஜெ பாலாஜி. அவனைப் போயி போட் ருக்காய்ங்க.! சூப்பரான கதைய கெடுத்துருவான் யா !”இப்படி தப்பா பேசுனாங்க . ஆனா அந்த கேரக்டர்ல நடிச்சது செல்வராகவன்.
இப்படியாக பாலாஜிக்கு எதிரான வெறுப்புக் குரலை பல குரலில் கேட்க நேர்ந்தது. இப்படி அடிக்கடி பிரசாத் லேப் ல இம்மாதிரியான வாக்குமூலங்களை பிரஸ் ஷோ இடைவேளையில கேட்கலாம். இதை விட மோசமான வார்த்தைகளால் நடிகர்கள் அல்லது டைரக்டர்களையும் கிழித்து தொங்கவும் போடுவாய்ங்க .அது அவரவர் மனம் சார்ந்தது. இந்த கேரக்டர்க்கு அந்த நடிகரை போட்டிருக்கலாம் என்கிற அவர்களது முடிவின் வெளிப்பாடு. இந்த கதை சார்பட்டா பரம்பரையின் ஆஜானுபாகான பாக்சர் வடிவேலுவை அவர்கள் எப்படியோ பார்த்து மனதுக்குள் வைத்துக்கொண்டதின் விளை வு.
சரி மேட்டருக்கு வரலாம். சொர்க்கவாசல் என்கிற பெயரை கிழித்து ‘க் கனாவை தீயிட்டுவிட்டு டைட்டிலை போட்டிருந்தாய்ங்க ! என்ன பிரச்னையோ?
ஆனா படத்தின் தொடக்கமே வித்தியாசமா இருந்தது. சென்னை மத்திய சிறைச்சாலையில் நடந்த மிகப்பெரிய கலவரத்தின் கதைதான் என்பதை முன்னதாகவே பத்திரிக்கையாளர்களிடம் சொல்லியிருந்தார்கள். அது மீனவ சமுதாயத்தை சேர்ந்த வடசென்னை பாக்சர் வடிவேலுவின் ஜெயில் வாழ்க்கையை மட்டும் மய்யமாக வைத்து அவர் காலத்திய நிகழ்வுகள் அடங்கிய கதை.
பாலாஜியும் அம்மாவும் சேர்ந்து வாய்க்கு ருசியா டிபன் கொடுக்கிற இரவு நேரத்து சாலையோர கையேந்தி பவனை நடத்திட்டு இருக்காங்க. அவங்க எயிம் பக்கா ஹோட்டலா மாத்தனும் கிறதுதான் . பாலாஜியின் காதலியும் கூடவே இருந்து குடும்பமும் நடத்துறாங்க. இதுல ஒண்ணும் கலாச்சார சேதமோ ,ஆச்சார சேதமோ ஏற்படல. ஒருத்தி மூணு புருஷனை கட்டிக்கிட்டு அன்னபூரணியா வணங்கபடுறதயும் நாம் நெஜத்துல பாத்திட்டு இருக்கமே. !
சென்னை சென்ட்ரல் ஜெயிலில் கிரேட் பிஸ்தா செல்வராகவன் ஆட்சிதான் நடக்கிது. ஒரு காலத்தில் போதை பொருள்கள் ஓட்டுதலில் பிஸ்தா ஜில்லா கேடியா இருந்தவர். இவர் வேணாம்னு சொன்னாலும் ஜெயிலில் பிஸினஸ் சூப்பர். செல்வாவுக்கு அடங்கிய அதிகாரிகள்தான் எல்லோருமே. மேலதிகாரிக்கு பயப்படாதவன் கூட செல்வா கிட்ட’ டர்ரு ‘ தான் . அப்படி மிரள்கிற அளவுக்கு செல்வராகவன் கிட்ட பாடியும் லாங்குவேஜும் இருந்ததா ? ஆள் பல்க் காவும் இல்ல பயங்கரமாகவும் இல்ல. . சரியா மொகத்தை காட்டல. தாடியும் முடியும் மொகத்தை கவர் பண்ணிருக்கு . எக்ஸ்பிரஷனை பாடி லாங்குவேஜ்ல நீங்க புரிஞ்சிக்கிட்டா சினிமா ரசனையான பிஸ்தாதான்.மத்தபடி இவரை குறை சொல்ல முடியாது.
ஜெயில்ல நடந்த மர்டர் மேட்டர்ல மிளகாப் பொடி சப்ளை பண்ணினார் னு பாலாஜியை அரெஸ்ட் பண்ணி உள்ள தள்ளுன பிறகு கதையும் வேகம் பிடிக்கிது . பாலாஜி நடிப்பிலும் நல்ல முன்னேற்றம் இருக்கு. ஒரு காமடியனா பார்க்கப்பட்டதாலேயோ என்னவோ சிலருக்கு அவர ஹீரோவா அக்சப்ட் பண்றதுக்கு சங்கடமா இருக்கு. ஆனா மக்கள் அவரை ஏத்துக்குவாங்க என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.நல்ல நடிப்பு. ஜெயில் அதிகாரி இவர வீட்டுக்கு அழைச்சிட்டு வந்த பிறகு யானைக்கால் தாய், காதலி மனைவி இவர்களைபார்த்து பாசத்தை பொங்கிய பிறகு விட்டுப்பிரிய மனமில்லாமல் ஜெயிலுக்கு திரும்ப மாட்டேன் என்று எதற்கும் துணிகிற பாசமுள்ள மனுசனை பார்க்கிறோம்.
ஜெயிலுக்குள்ளும் பாலாஜி பல இடங்களில் ஸ்கோர் பண்ணிருக்கார். எம். எல். ஏ க்களுக்கு அந்த கேவலமான செக்ஸ் வேலை நடக்கிறத பார்த்து பொங்குற கட்டம் இயல்பான மனிதனின் கோபம் . இங்க டைரக்டர் சித்தார்த் விஸ்வநாதனை பாராட்டியே ஆகவேண்டும். அழகிய பெண்மை தோற்றமுள்ள அந்த இளைஞனை ‘இனம் ‘சொல்லாதது பெருமைக்குரியது . அதே நேரத்தில் அத்தகைய கேவலமான செக்ஸ் வேலைகள் உயர்தர ,பிஸ்தா , அரசியல் தலைகள் ஆகிய ஜன்மங்களுக்கு கிடைக்கும் என்பதையும் பகிரங்கமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.
செல்வராகவனை காணோம், அவர் அதிகாரிகளால் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்ற செய்தி பரவியதும் ஜெயிலுக்குள் புரட்சியே நடக்கிது. அதிகாரிகள் கொல்லப்பட்டதும் பதிலுக்கு குற்றவாளிகளாக ஜெயில் அடைபட்டவர்கள் சுடப்பட்டு வீழ்ந்ததும் தமிழச்சினிமா பார்த்திராத படப்பிடிப்புகள். ஜெயிலர் நிஜமாகவே உயிரோடு கொளுத்தப்பட்டது சென்னை மத்திய சிறையில்தான்.!அது திமுக ஆட்சியில் நடந்தது . ஜெயில் உடைப்பு நடந்திருந்தால் கலைஞர் ஆட்சி கலைக்கப்படுகிற அபாயமும் நிகழ்ந்திருக்கும்.
ஜெயில் வாசலில் அந்த காலகட்டத்தில் அதிமுகவினர் நடத்திய போராட்டத்தையும் இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.
பிரின்ஸ் ஆண்டர்சனின் ஆங்கிலப் படத்தர ஒளிப்பதிவு, இந்த கதைக்கு உயர்தர அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது. உழைப்பு வீணாகவில்லை. விருது கொடுத்தால் அரசுக்கு பெருமை. அது எந்த அரசாக இருந்தாலும்.
நீதி விசாரணைக்கு நட்டி போன்ற சீக்காளிகளும் வருவது உண்டு என்பது நல்ல சட்டயர், நட்டி சிறந்த நடிப்பு. நேர்மையான அதிகாரி.
இந்த படத்தில் வாழ்ந்திருக்கிற இன்னொரு நடிகர் கருணாஸ். வாய்ப்பு கிடைத்தால் உச்சங்களையும் தொட முடியும் என்கிற கருப்புத் தமிழனுக்கு போலீஸ் சல்யூட் .!
ஒரு முக்கிய கோரிக்கை. திரைப்பட பி ஆர் ஓ உடன்பிறப்புகளுக்கு.
தயை செய்து பிரஸ் ஷோ க்களுக்கு விமர்சனம் செய்பவர்களை மட்டுமே அனுமதியுங்கள் . யாரோ எவரோ வேண்டியவர் என அனுமதிப்பதால் இடையூறுகள் அதிகம். எனக்கு சொந்த அனுபவம் சோகம் .
சரி சொர்க்கவாசல் எப்படி ?
மக்களுக்கு தெரியாத சிறைச்சாலையின் வாசலை திறந்து காட்டிவிட்டார்கள்.
பாராட்டவேண்டிய முயற்சி !
–தேவிமணி