ஸ்ரீனிவாச ராவ் ஜலகம் தயாரித்து, அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியிருக்கும் படம், எமகாதகி. இந்தப் பெயரே, சினிமா ரசிகர்களிடத்தில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பினை உருவாக்கியது.
எமகாதகி படத்தில், ரூபா கொடுவாயூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன் நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜு ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எமகாதகி படத்திற்கு, சுஜித் சாரங்க் ஒளிப்பதிவு செய்திருக்க, ஜெசின் ஜார்ஜ் இசையமைத்திருக்கிறார்.
ஒரு கிராமம். அந்த கிராமத்து ஊர் தலைவரின் மகள் (ரூபா கொடுவாயூர்) லீலா. அவர், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அன்புவை காதலிக்கிறார். இது குறித்து ஊர் தலைவரிடம், ஒருவர் கூறுகிறார். ஊர் தலைவர் பலத்த அவமானத்தோடு வீடு திரும்புகிறார். கோபத்தில் லீலாவை, கெட்ட வார்த்தையால் டிட்டிவிட்டு கண்ணத்தில் அறைந்து விடுகிறார். லீலா கோபத்தில் தற்கொலை செய்து கொள்கிறார்.
ஊரில் உள்ளவர்களுக்கு இயற்கையாக மரணம் அடைந்து விட்டதாக சொல்லி, அடக்கம் செய்வதற்கான வேலையை செய்கின்றனர், லீலாவின் வீட்டார். ஊரே கூடி நிற்கும் நிலையில், லீலாவின் பிணத்தை, எவ்வளவோ போரடியும் வீட்டை விட்டு வெளியே கொண்டுவர முடியவில்லை. மக்கள் மொத்தமும் உறைந்து போகின்றனர். பிணம் எரிப்பவர், சாமியார் என எல்லோரும் முயற்சி செய்தும், பிணத்தை வீட்டை விட்டு வெளியே கொண்டு வர முடியவில்லை. இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் எமகாதகி.
அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன், முதல் படத்தின் மூலமே ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்திருக்கிறார், என்றே சொல்ல வேண்டும். ஒரு சின்ன ப்டஜெட். அந்த சின்ன பட்ஜெட்டிற்குள் கதையை எவ்வளவு சுவாரசியமாக சொல்ல முடியுமோ சொல்லியிருக்கிறார். சாதி பிரச்சனை, காதல், தெய்வ நம்பிக்கை, அமானுஷ்யங்கள் என இந்தப்படத்தில் அனைத்தும் உள்ளது. லாஜிக்குகளும், ஆங்காங்கே தொய்வடையும் திரைக்கதை இருந்தாலும் மோசமில்லை!
படத்தின் பெரும் பலமாக இருப்பது சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவும், ஜெசின் ஜார்ஜின் இசையும் தான். குறிப்பாக பின்னணி இசை காட்சிகளை மேம்படுத்துகிறது. Sound Design – Sync Cinema மற்றும் Sound Mixing – Aravind Menon இவர்கள் பாராட்டுக்குரியவர்கள். நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள தியேட்டரில் ‘எமகாதகி’ படத்தை பார்த்தால், நல்ல அனுபவத்தை தரும்.
நடிகர்களை பொருத்தவரை அனைவரும் குறிப்பிடத்தகுந்த வகையில் நடித்திருக்கிறார்கள். கீதா கைலாசம், வெறித்த பார்வையால் நடித்து கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில், ரூபா கொடுவாயூரரை மடியில் சாய்த்து அழும் போது, படம் பார்த்துக் கொண்டிருப்பவர்களின் கண்களிலும் கண்ணீர் வருகிறது.
ரூபா கொடுவாயூர் சிறப்பாக நடித்திருக்கிறார். காதல் செய்யும் போதும், பிணமாக நடிக்கும் போதும் தனது சிறந்த நடிப்பினால் பார்வையாளார்களை எளிதில் கவர்ந்து விடுகிறார்.
சமீபத்தில் வந்த சின்ன பட்ஜெட் படங்களில், எமகாதகி’யும் கவனம் பெற்றுள்ளது.