‘குபேரா’ – (விமர்சனம்.) கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை!

‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்’ – ‘அமிகோஸ் கிரியேஷன்​ஸ் பிரைவேட் லிமிடெட்,’ நிறுவனங்கள் சார்பில், சுனில் நரங், புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம், குபேரா. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்க, நிகேத் பொம்மி, ஒளிப்பதிவினை செய்திருக்கிறார்.

குபேரா திரைப்படத்தில் தனுஷ், நாகார்ஜுனா அக்கினேனி, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், தலிப் தஹில், சுனைனா, சாயாஜி ஷிண்டே, கே.பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்திய பொருளாதாரத்தினை நிர்ணயிக்கும் தொழிலதிபர்களில் ஒருவர், தலிப் தஹில். அவருடைய மகன் ஜிம் சர்ப், இந்தியாவுக்கு சொந்தமான கடல் பகுதியில், எரிவாயு, எண்ணெய் வளம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த ஆராய்ச்சியில், உலக நாடுகள் இந்தியாவை திரும்பிப்பார்க்கும் வகையில் அபரிதமான, வளமான அரிய வகை, வாயுக்கள் மற்றும் எண்ணெய் வளம் இருப்பது தெரிய வருகிறது. இதை, வெளியுலகினருக்கு தெரியாமல், ஆளும் அரசின் செல்வாக்குமிக்க, மத்திய அமைச்சர் ஹரிஷ் பெரடியுடன் சட்டவிரோதமாக ‘1 லட்சம் கோடி’ ரூபாய்க்கு  ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இந்த பணத்தினை சம்பந்தபட்டவர்களுக்கு ரகசியமாக கொடுக்க, நேர்மையான சி பி ஐ அதிகாரி நாகார்ஜுனாவை நியமிக்கிறார், ஜி சர்ப்.

நாகார்ஜுனா, அந்த பணத்தினை பிச்சைகாரர்கள் மூலமாக விநியோகிக்க முடிவு செய்கிறார். இதற்காக, இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள, நான்கு அநாதை பிச்சைக்காரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதில் ஒருவர் திருப்பதியில் பிச்சை எடுத்து வரும் தனுஷ். இவர்கள் மூலம் பணம் சட்டப்படி பரிமாற்றம் செய்யப்பட்டவுடனே கொல்லப்படுகிறார்கள். இதை தெரிந்து கொள்ளும் தனுஷ், அந்தப்பணத்தினை தன்வசமாக்கிக்கொள்ள முடிவு செய்கிறார். அது நடந்ததா, இல்லையா? என்பது தான், ‘குபேரா’ படத்தின் மீதிக்கதை.

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை, பல மொழி திரைப்படங்களில் நடித்து வரும், நடிகர் தனுஷூக்கு இந்தப்படம், அவர் நடித்த படங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. தமிழ் சினிமாவின் சில பெர்ஃபார்மென்ஸ் நடிகர்களில், தனுஷூம் ஒருவர். என்பதை, இந்தப்படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார். படிப்பறிவில்லாத ஒரு பிச்சைக்காரனாக, படம் முழுவதும் தன்னுடைய நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில், விசாரணை செய்யும் அதிகாரியான சாயாஷி ஷிண்டே முன்பு, தயங்கியபடியே கால் மேல் கால் போட்டபடி, அவரிடம் பேசும் காட்சியை, அவரது  சிறந்த நடிப்பிற்கு உதாரணமாக சொல்லலாம்.

கைவிட்ட காதலனை தேடியபடி, மும்பை புறநகர் ரயிவே ஸ்டேஷனில், தனுஷை சந்திக்கும் அந்த முதல் காட்சியிலிருந்து, கடைசி காட்சி வரை, அப்பாவி பெண்ணாக நடித்து, அனைத்து ரசிகர்களையும், எளிதில் கவர்ந்து விடுகிறார் ராஷ்மிகா மந்தனா. காட்சிககளுக்கேற்றபடி, அனைத்து விதமான உணர்வுகளையும் நன்கு, வெளிப்படுத்தியிருக்கிறார்.

முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாகார்ஜுனாவும், சி பி ஐ அதிகாரி,  ‘தீபக்’ கதாபாத்திரமும் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை! அவரது மனைவியாக நடித்திருக்கும் சுனைனாவும் பெரிதாக கவனம் பெறவில்லை. நாகார்ஜூனாவின் கதாபாத்திரம் இன்னும் வீரியமாக இருந்திருக்க வேண்டும்.

வில்லனாக நடித்த ஜிம் சர்ப், தான் ஒரு ஸ்டேஜ் ஆர்ட்டிஸ்ட் என்பதை, ‘பத்மாவத்’ உள்ளிட்ட பல படங்களில் நிரூபித்தவர். ‘நீரஜ் மித்ரா’வாக இந்தப்படத்திலும் தனது சிறப்பான நடிப்பினை கொடுத்திருக்கிறார். அவரது அப்பாவக நடித்திருக்கும் தலிப் தஹில், குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்.

மற்றபடி, இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சாயாஜி ஷிண்டே, தனுஷின் வளர்ப்பு தாத்தாவாக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், ரிஜிஸ்டராக நடித்திருக்கும் ஜெயபிரகாஷ் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கேற்றபடி நடித்திருக்கின்றனர்.

குபேரா திரைப்படத்தின் முதல் 20 நிமிடங்கள் பரப்பரபாக நகர்கிறது. அதன் பிறகு, கொஞ்சம் மெதுவாக செல்வது போல் தோன்றுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் கார்ப்பொரேட் நிறுவனங்களின் ஆதிக்கமும், அரசியல் அதிகாரங்களையும், மக்களின் வாழ்க்கையையும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார், இயக்குநர் சேகர் கம்முலா. அரசு மற்றும் கார்ப்பொரேட் நிறுவனங்கள் இணைந்து மக்களை ஆட்டுவிப்பதை, அப்பட்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் பலவீனம் என்றால், அதன் நீளம் தான். சுமார் மூன்று மணி நேரம்.

ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு சிறப்பு.  மும்பை புறநகர் பகுதியான காட்டன் கிரீன், அதை சுற்றியுள்ள பகுதிகள். டெல்லி, காசி, திருப்பதி ஆகிய பகுதிகளை அழகாக படமாக்கியிருக்கிறார்கள். தோட்டா தரணியின் ‘செட்’ கூட தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

சிறப்பான இசையை கொடுத்திருக்கிறார், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்.

அகோரம் பன்னீர் செல்வத்தின் வசனங்கள், பல இடங்களில் பாராட்டும்படி இருக்கிறது.

நாட்டின் இயற்கை வளங்கள் சுரண்டல் குறித்த, கார்ப்பொரேட் முதலாளிகளின் ஆதிக்கத்தினை தைரியமாகவும், சிறப்பாகவும் சொன்ன இயக்குநர் சேகர் கம்மூலாவையும், தயாரிப்பாளர்கள் சுனில் நரங், புஸ்கூர் ராம் மோகன் ராவ், இருவரையும் பாராட்டலாம்.

படத்தின் நீளத்தினையும், சில நம்பமுடியாத காட்சிகளையும் தவிர்த்திருந்தால், இன்னும் சூப்பராக இருந்திருக்கும்

குபேரா – பார்க்க வேண்டியபடம்!