‘டி என் ஏ’ ( DNA) – விமர்சனம்!

அதர்வா – நிமிஷா சஜயன், நாயகன் நாயகியாக நடித்திருக்க, நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம், ‘டி என் ஏ’ ( DNA). இப்படத்தினை, ‘ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம்’ சார்பில், தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்திருக்கிறார். ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
‘டி என் ஏ’ ( DNA) திரைப்படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன் ஆகியோருடன் மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா ,சுப்பிரமணியம் சிவா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்க, ஜிப்ரான் வைபோதா படத்திற்கு பின்னணி இசை அமைத்திருக்கிறார்.
காதலில் தோல்வி அடைந்த நாயகன் அதர்வா, அதிலிருந்து மீளுவதற்காக சாராயம், சிகரெட், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தி வருகிறார். (வலுகட்டாயமாக திணிக்கப்பட்ட இந்த காட்சிகளை, இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன் ரசித்து, ருசித்து எடுத்திருக்கிறார்.) அதிலிருந்து அதர்வாவை மீட்பதற்கு, ஒரு மறுவாழ்வு மைய்யத்தின் மூலம் அவரது குடும்பத்தினர் சிகிச்சை கொடுக்கின்றனர். அதர்வாவும் அதிலிருந்து மீள்கிறார். அதன்பிறகு, மனநிலை பாதிக்கப்பட்ட நாயகி நிமிஷா சஜயனை திருமணம் செய்து வைக்கின்றனர்.
அதர்வா, நிமிஷா சஜயன் இருவரும் திருமணமாகி தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றனர். இருவரும் இணக்கமாக வாழ்ந்து வரும் நிலையில், அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. சில மணி நேரங்கள் கழித்து, தன்னுடைய குழந்தை மாறிப்போனதாக நிமிஷா சஜயன் கூச்சலிடுகிறார். ஆனால், மற்றவர்கள் மன நிலை சரியில்லாத காரணத்தால் அப்படி கூச்சலிடுவதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது. ஆனால், அதர்வா, நிமிஷா சஜயன் சொல்வது உண்மை என நம்புகிறார். அதனால், குழந்தையைத் தேடி அதர்வா செல்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் ‘டி என் ஏ’ ( DNA) படத்தின் மீதிக்கதை.
‘டி என் ஏ’ ( DNA) திரைப்படத்தின் முதல் சுமார் 30 நிமிடக்காட்சிகள், மொத்தத் திரைப்படத்திற்கும் தேவையற்ற காட்சிகளாக இருப்பதோடு, அந்தக்காட்சிகள் எந்த விதத்திலும் ஈர்ப்பாக இல்லை. அதன் பிறகான காட்சிகள், மெல்ல வேகமெடுப்பதோடு ‘ப்ரி க்ளைமாக்ஸ்’ வரை, ஒரு நல்ல ‘கிரைம் டிராமா’ படத்தினை பார்த்த அனுபவம் ஏற்படுகிறது. அதற்கு பிறகு, வழக்கமான மூட நம்பிக்கை, ஹீரோயிசம், இத்யாதி… ரசிக்கத்தக்க இல்லாத, ஒரு வழக்கமான சினிமாவாக மாறிவிடுகிறது.
நடிகர்களின் நடிப்பினை பொறுத்தவரை, முதலில் நிற்பது, நிமிஷா சஜயன் தான். சிதைந்த, சுயநிலையற்ற மன நிலை (Borderline Personality Disorder) கொண்ட பெண்ணாக, சிறப்பாக நடித்திருக்கிறார். பல காட்சிகளில் சிறப்பாக, கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்திருக்கிறார். அடுத்தாக பாலாஜி சக்திவேல். இவர்களுக்குப் பிறகே அதர்வாவின் நடிப்பு இருக்கிறது. அதர்வாவின் கதாபாத்திரத்தில் சில மாற்றங்களை செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்குமோ!?
மற்றபடி மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா, சுப்பிரமணியம் சிவா, கருணாகரன் போன்றோரும் நடித்துள்ளனர்.
பார்த்திபனின் ஒளிப்பதிவு படத்தின் பலமாக இருக்கிறது. அதுபோல் படத்தின் பின்னணி இசையும் படத்தின் பலமாக இருக்கிறது.
எடிட்டிங் செய்திருக்கிறார். சாபு ஜோஸப். ஆரம்பக்காட்சி பாதியிலிருந்து தொடங்குவதுபோல் இருக்கிறது. இன்னொரு பார்வை கோணத்திலும், படத் தொகுப்பபினை செய்ய வாய்ப்பிருப்பது போல் காட்சிகள் இருக்கிறது. அப்படி செய்திருந்தால், துண்டாக தெரியும் ஆக்ஸிடென்ட், குழந்தை காட்சி, மேலும் திரைக்கதையில் விறுவிறுப்பினை கொடுத்திருக்கும்.
மற்றபடி, ‘டி என் ஏ’ ( DNA) ஒரு ஆவரேஜான க்ரைம் டிராமா!