
‘ஜி.எஸ்.ஆர்ட்ஸ்’ நிறுவனம் சார்பில், ஜி.அருள்குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம், தீயவர் குலை நடுங்க. இதில், அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி வெங்கடாச்சலம், பிரவீன் ராஜா, லோகு, சிவாஜி கணேசன் ராம்குமார், தங்கதுரை, பேபி அனிகா, பிராங்ஸ்டர் ராகுல், பிரியதர்ஷினி, சையத் ,ஜி கே ரெட்டி , பி எல் தேனப்பன், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்க, பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார்.
பல திரைப்படங்களில் பார்த்த, அடுத்தடுத்து நடக்கும் மர்மக் கொலைகள் பற்றிய கதை தான், தீயவர் குலை நடுங்க.
ஒரு நாள் நள்ளிரவில், எழுத்தாளர் ஒருவர், முகமூடி அணிந்த மர்ம நபரால் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலை ஏன் நடந்தது. கொலையாளி யார் என்பதை இன்ஸ்பெக்டர் அர்ஜூன் கண்டு பிடிக்க விசாரணையில் இறங்குகிறார். அப்போது அபிராமி வெங்கடாச்சலத்தின் மகளான அனிகா மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்தது தெரிய வருகிறது. மேலும் நடை பெற்ற விசாரணையில், வேல ராமமூர்த்தி, ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி வெங்கடாச்சலம், பிரவீன் ராஜா ஆகியோர் சந்தேக வளையத்திற்குள் வருகின்றனர். கொலையாளியை அர்ஜூன் நெருங்கும் போது, மிகப்பெரிய டிவிஸ்ட் ஒன்று நடக்கிறது. அது அர்ஜூனுக்கு மட்டுமல்ல. ரசிகர்களுக்கும் செம டிவிஸ்ட்! அது என்ன? என்பதை தன்னால் முடிந்த அளவிற்கு சுவாரசியமாக சொல்லியிருக்கிறார், அறிமுக இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன்.
படம் தொடங்கிய சில நிமிடங்களில் ஒரு கொலை. அதைத் தொடர்ந்து விசாரணை. என விறுவிறுப்பாக பயணிக்கிறது. அது கடைசி வரை இல்லை. என்பது தான், படத்தின் மைனஸ். அதோடு க்ளைமாக்ஸ் தவிர, மற்ற அனைத்து காட்சிகளும் யூகிக்க முடிவதாலும், ஏற்கனவே பல படங்களில் பார்த்த காட்சிகள் என்பதாலும், சுவாரசியமே இல்லாமல் போகிறது.
தீயவர் குலை நடுங்க திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பதால், அர்ஜூன் பெரிதாக அலட்டிகொள்ளாமல் நடித்திருப்பது போல் தெரிகிறது. நன்றாக நடிக்கும் அர்ஜூனா, இப்படி நடித்திருக்கிறார்? என்பது போல அவரது நடிப்பு இருக்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ், குழந்தைகளின் மேல் பாசம் காட்டுவதிலும், காதலனிடம் தன் காதலை வெளிப்படுத்தும் போதும், ஆக்ரோஷமாக சண்டையிடும் போதும் நன்றாகவே நடித்திருக்கிறார்.
மற்றபடி, அபிராமி வெங்கடாச்சலம் , ஐஸ்வர்யா ராஜேஷின் காதலராக நடித்திருக்கும் பிரவீன் ராஜா, அபிராமி வெங்கடாச்சலத்தின் அப்பாவாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, சிவாஜி கணேசன் ராம்குமார், பி எல் தேனப்பன், சிறுமி அனிகா, பிரியதர்ஷினி, , பிராங்ஸ்டர் ராகுல் ஆகியோரும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவும், பரத் ஆசிவகன் இசையமைப்பும் பரவாயில்லை!
‘தீயவர் குலை நடுங்க’ – பெயரில் மட்டுமே!












