
தமிழ் வாசகர்கள் மத்தியில், க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்கு, க்ரைம் கதைகளின் மன்னன், ராஜாதிராஜா என பல பட்டப்பெயர்கள் உண்டு. 50 வருடங்களுக்கு மேலாக 1000 திற்கும் மேலான நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதி வருகிறார். ‘ரேகை’ – இணையத் தொடர், அவரது கதையை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கிறது.
‘ரேகை’ இணையத் தொடரில் பாலஹாசன், பவித்ரா ஜனனி, கோபலன் பிரகதேஷ்,வினோதினி வைத்தியநாதன், அஞ்சலி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தினகரன் இத்தொடரை இயக்கி இருக்கிறார். ‘எஸ் எஸ் குரூப் புரொடக்ஷன்’ சார்பில், எஸ்.சிங்காரவேலன் தயாரித்துள்ளார். Z5 தமிழ் OTT தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
போலீஸ் சப் இன்ஸ்பெக்டரான நாயகன் பாலா ஹாசன், ஒரு செயின் பறிப்பு சம்பவத்தை விசாரித்து விட்டு வரும் வழியில், ட்ரை சைக்கிளில் செல்லும் சந்தேகத்திற்கு ஆளான ஒருவனை விரட்டிப்பிடிக்க முயற்சிக்கிறார். அவன் கொதிக்கும் தார் டின்னில் விழுந்து இறக்கிறான். அவன் ஓட்டிவந்த ட்ரை சைக்கிளில் மனிதக்கைகள் இருக்கிறது. அதை கைப்பற்றி விசாரிக்கும் போது பல மர்மமான கொலைகள் நடந்துள்ளது தெரிய வருகிறது. அதோடு கொலையாணவர்களின் கை ரேகைகள் ஒரே மாதிரியாக இருக்கிறது. இதனால், ஒட்டுமொத்த போலீஸூம் அதிர்ச்சியடைகிறது. கொல்லப்பட்டவர்கள் யார்? அவர்களின் ரேகைகள் ஏன் ஒரே மாதிரியாக இருக்கிறது? என்பதை, விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார், இயக்குநர் தினகரன்.
கதையின் நாயகனாக, கொலைகளுக்கன விசாரணை செய்யும் சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலா ஹாசனின் தோற்றமும், நடிப்பும் அந்த கதாபாத்திரத்துடன் சிறப்பாக பொருந்தியிருக்கிறது. அவரது கம்பீரமான உடல்மொழியும் விசாரணை செய்யும் பாங்கும் திரைக்கதைக்கு கூடுதல் சுவாரசியத்தைத் தருகிறது.
போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் பவித்ரா ஜனனி, பாலஹாசனின் காதலியாகவும், கொலை பற்றிய விசாரணைக்கு உதவுபவராகவும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். வினோதினி, போஸ்ட் மார்ட்டம் செய்யும் டாக்டராக நடித்து கவனம் ஈர்க்கிறார். ரசிகர்களிடம் போதிய அறிமுகமில்லாத கொலைகளுக்கு மூல காரணமாக இருக்கும் பெண் உள்ளிட்ட தொடரில் நடித்துள்ள பலர், திரைக்கதைக்கும் அதன் சுவாரசியத்திற்கும் போதுமான பங்களிப்பினை செய்துள்ளனர். பின்னணி இசை, ஒரு க்ரைம் படத்திற்கும் அதன் காட்சிகளுக்கும் ஏற்றபடி அமைந்திருக்கிறது. அதேபோல், ஒளிப்பதிவாளர் மகேந்திரா எம்.ஹெண்ட்ரியின் ஒளிப்பதிவும் அமைந்துள்ளது.
ஒரு சில லாஜிக்குகளை மட்டும் தவிர்த்துவிட்டு பார்த்தால், ‘ரேகை’ ஒரு விறுவிறுப்பான க்ரை த்ரில்லர்!












