கிட்ட தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் நாளை மறு நாள் மே 15ம் தேதி முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.முதல் கட்டமாக 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்றப் பொறுப்பாளர்களில் சில ஆயிரம் பேர்களுக்கு அழைப்பு தரப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வரும் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. பார்கோடுடன் கூடிய இந்த அட்டை இருந்தால் மட்டுமே ராகவேந்திரா மண்டபத்துக்குள் அனுமதி உண்டு.இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்றத்தின் பொறுப்பாளர் விஎம் சுதாகர் விடுத்துள்ள அறிக்கையில், “அன்புத் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்.மதிப்பிற்குரிய ரஜினிகாந்த் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாவட்ட வாரியாக மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டும்தான் அனுமதி. அடையாள அட்டை இல்லாதவர்கள் கண்டிப்பாக மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம். அன்புடன் ஒத்துழைக்கக்கவும்,” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.