‘ஈபி எப் பிக்சர்ஸ்’ சார்பில் எட்வர்ட் ராஜன் தயாரித்துள்ள ‘சாத்தான் – தி டார்க்’ திரைப்படத்தினை, எழுதி, இயக்கியிருக்கிறார், மணிகண்டன் ராமலிங்கம். இதில், (FJ) ஃப்ரெட்ரிக் ஜான், ஐரா , சாந்தினி தமிழரசன், மோனா பெட்ரே, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கணவனை இழந்த மோனா பெட்ரே தனது மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு செல்லும் போது, மோனா பெட்ரேவின் மூத்த மகள் ஐரா, தனது அம்மாவை உள்ளே வைத்து பூட்டிவிட்டு செல்கிறாள். ஐரா, தனது அம்மா மோனா பெட்ரேவின் வித்தியாசமான செயல்பாடுகளாலும் கவலைப்பட்டு வருகிறார். இந்நிலையில், அந்த ஊரில் உள்ள சிலர், உடல் முழுவதும் வித்தியாசமான எழுத்துக்களால் கிறுக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடைக்கின்றனர். போலீசார், இந்த தொடர் மர்ம மரணங்களை விசாரிக்கும் போது பல திடுக்கிடும் சம்பவங்கள் நிகழ்கிறது. அது என்ன? ஏன், அப்படி நிகழ்கிறது! என்பது தான், ‘சாத்தான் – தி டார்க்’ திரைப்படத்தின் கதை!
வியாபாரத்திற்காக இந்தியா வந்த ஆங்கிலேயர்களும், ஃப்ரெஞ்சுக்காரர்களும் கிறிஸ்தவ மதத்துடன், சாத்தான் வழிப்பாட்டினையும் பரப்பினர். அதை வழிவழியாக கடைபிடித்த ஒரு கிராமத்தினரின் மாந்திரீக, விலங்கு மற்றும் நரபலியைச்சுற்றி நிகழும் திரைக்கதை, படம் ஆரம்பித்த முதல் பாதியில் திகிலைக் கொடுக்கிறது.
தலைமுறை தலைமுறையாக வந்த ஒரு சூனியக்காரக் குடும்பத்தில் இருந்து தான் காதலித்த பெண் ஐராவை, நாயகன் (FJ) ஃப்ரெட்ரிக் ஜான் காப்பாற்ற போராடும் காட்சிகளும் சற்று திகிலை ஏற்படுத்துகிறது. அதன் பிறகான காட்சிகள் போதிய அலுத்தமும், தெளிவுமின்றி நிகழுவதால் ரசிக்க முடியவில்லை. பயமும் ஏற்படவில்லை. மாறாக வெறுப்பு ஏற்படுகிறது. காட்சிகளுக்கேற்ற பின்னணி இசை இல்லாதது. படத்தின் பெரும் பலவீனம். திரைக்கதையும் நேர்த்தியாக வடிவமைக்கப்படவில்லை.
நடிப்பினை பொருத்தவரை, மோனா பெட்ரே சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். ஐராவும் குறை சொல்ல முடியாத நடிப்பினை வெளிப்படுத்துகிறார். (FJ) ஃப்ரெட்ரிக் ஜான் நடிப்பிலும் குறையில்லை.
ஒளிப்பதிவு பாலா ஜி ராமசாமி. படத்தின் பலம். அஸ்வின் கிருஷ்ணாவின் பின்னணி இசை கவனம் ஈர்க்கவில்லை. ரத்தம் தெறிக்கும் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம், திகில் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
‘சாத்தான் – தி டார்க்’ – அமெச்சூர் அட்டெம்ப்ட்!












