சிங்காரவேலன் தயாரித்து, ZEE5 ஓடிடி தளத்தில் சவிர் சுதாகர் இயக்கத்தில் வெளியாகியுள்ள புதிய தமிழ் இணையத் தொடர் ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’. இதில் வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட் பாலமுரளி , ஜெகபர் சாதிக், நான் கடவுள் ராஜேந்திரன் , விவேக் பிரசன்னா ,சம்பத் ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒரு சிறிய கிராமத்து இளைஞர்களின் அளவற்ற கிரிக்கெட் மோகத்தையும், அதனால் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் ஜாலியான ஸ்போர்ட்ஸ் ட்ராமா தான், ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’.
சின்னா (வைபவ் முருகேசன்), ஷகீல் (வெங்கட பாலமுரளி), சிவா (ஜகபர் சாதிக்) ஆகிய மூன்று நண்பர்களுக்கும் கிரிக்கெட் என்றால் உயிர், தங்களது ரோல் மாடல் கிரிக்கெட் வீரர் என்றால் அலாதி பிரியம். அதிலும் தங்களது ஆத்மார்த்தமான நாயகன் டோனி என்றால் கேட்கவே வேண்டாம். இப்படியான சூழலில், சென்னையில் நடக்கும் தங்களது நாயகனின் ஆட்டத்தை நேரில் பார்க்க முடிவு செய்கின்றனர். இவர்களுடன் செல்லும் சாருவும் (லாவண்யா அன்பழகன்) செல்ல முடிவு செய்கிறார். பயணத்திற்கான பணத்திற்காக சில தவறான வழிகளைக் கையாண்டு சென்னைக்குச் செல்கிறார்கள். சென்னைக்கு வந்த பிறகு போலி டிக்கெட் மோசடிகள், பெட்டிங் கும்பல்கள் போன்ற எதிர்பாராத சம்பவங்களால் மாட்டிக்கொள்கிறார்கள். இறுதியில் அவர்கள் போட்டியைப் பார்த்தார்களா? என்பதே மீதிக் கதை.
கிரிக்கெட் மீதான வெறித்தனமான ரசிகர்களின் உணர்வுகளையும், அது அவர்களை எப்படிப்பட்ட தவறான பாதைகளுக்கு அழைத்துச் செல்கிறது என்பதையும் விவரித்த விதம் பாராட்டுக்குரியது.
வைபவ் முருகேசன், லாவண்யா, வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக் ஆகியோர் தங்களது எதார்த்தமான நடிப்பால் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். விவேக் பிரசன்னா மற்றும் நான் கடவுள் ராஜேந்திரனின் கதாபாத்திரங்கள் கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.
நண்பர்கள் சென்னைக்கு வந்தடைந்தது முதல் போலி டிக்கெட், பெட்டிங் பிரச்சனைகளில் சிக்குவது வரையிலான காட்சிகள் விறுவிறுப்பாக நகர்கின்றன. பி.எம். ராஜ்குமாரின் எதார்த்தமான ஒளிப்பதிவும், பாரத் தனசேகரின் பின்னணி இசையும் கிராமத்து மற்றும் சென்னை நகர சூழலைச் சிறப்பாகப் பிரதிபலிக்கின்றன.
முதல் சில அத்தியாயங்கள் (Episodes) கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதிலும், கிராமத்துச் சூழலை விளக்குவதிலும் அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் சற்று பொறுமையாக செல்கிறது. அதன் பிறகு சென்னையில் நடைபெறும் சில சம்பவங்கள் வழக்கமான பாணியில் அமைந்தாலும் மோசமில்லை.
மொத்தம் 6 அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர், கிரிக்கெட் ரசிகர்களின் உலகத்தையும் அதன் பின்னால் இருக்கும் எதார்த்தப் பக்கங்களையும் பேசுகிறது. கிரிக்கெட் விரும்பிகளுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்குத் தொடராக மாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது.
‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ – கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டும்!












