“களவாணிப் பய பெரிய ஆளா, காவ காக்கிறவன் பெரிய ஆளா? சொல்லுங்கடா!” என்று கேட்டு விட்டு கடகடவென் சிரித்தான் வீரப்பன்.
சேத்துக்குளி கோவிந்தன்,அர்ச்சுனன்,இவர்களை அடுத்து ரொம்பவும் சகஜமாக பேசுகிற ஆள் மீசைக்கார மாதையன் தான்! வீரப்பன் அளவுக்கு அவ்வளவு பெரிய மீசை இல்லை என்றாலும் சுமாராக வளர்த்திருந்தான்.அந்தக் கூட்டத்தில் இன்னொரு மாதையனும் இருந்தான்.இதனால் இவனை எல்லோரும் மீசைக்கார மாதையன் என்றுதான் சொல்லுவார்கள்.
வீரப்பனுக்கு மீசைக்கார மாதையன்தான் பதில் சொன்னான்.
“காவல் காக்கிற பயலுக பெரிய ஆளுங்களா இருந்திருந்தா இந்நேரம் நாம்ம இங்கே இருக்க முடியுமாக்கும்? இந்த காட்டை பொருத்தவரை களவாணிப் பயலுகதான் பெரிய ஆளுங்க!”
“”கரெக்டுடா மாப்ள….நாம்ப பெரிய ஆளுங்களா இருக்கிறதாலதான்டா மைசூர்ல இருந்து சாவுறதுக்குன்னே நம்பளத் தேடி வந்திருக்கானுங்க. ஒரு நாய் கூட உசிரோடு திரும்பக்கூடாது .சல்லி சல்லியா மண்டை சிதறனும் ! ஒரே அடிதான்!”
வெறி இருந்தது வீரப்பனுக்கு!
பிபின் கோபால கிருஷ்ணன் தலைமையில் தன்னைப் பிடிக்க ஒரு கோஷ்டி வந்திருப்பது அவனுக்குத் தெரியும்!
எப்படியோ, எந்த வகையிலோ அவனுக்குச்செய்தி வந்து விடுகிறது.கோபி நத்தத்திலிருந்து எத்தனை பேர் ஹொகனேக்கல் வரப்போகிறார்கள்,எந்த வழியாக அவர்கள் வருவார்கள் என்பதைத் துல்லியமாக சொல்லி இருந்தனர்.
சேத்துக்குளி, மீசைக்கார மாதையன்,பெருமாள்,ஆறுமுகம், மாரிமுத்து, ஆத்தூர் கோபாலன், குருநாதன், சுவாமிநாதன் ,மாரியப்பன் ,ஆண்டியப்பன் இவர்களுடன் மேலும் எட்டுப்பேர்களை தயார் படுத்தி இருந்தான்.
“ஒரே போடுதான்! சிதறிப்போகனும், நெஞ்சுல சுடு! இல்லேன்னா நெத்தியில சுடு! கையி,காலுன்னு சுட்டு தோட்டாவை வேஸ்ட் பண்ணிடாதே! இத்தோடு எந்தப்பயலும் நம்ம தேடி வரக்கூடாது !பயங்கரமா அடி கொடுக்கணும்! புரியுதா?” திரும்பத் திரும்ப சொல்லி கொண்டே கீழே இறங்கினான்.
தலையை ஆட்டிக்கொண்டே ஆட்டு மந்தை மாதிரி வீரப்பனின் பின்னாடியே மலைச்சரிவில் இறங்கினார்கள்.
நாளை ஹொகனேக்கல் அட்டாக்!