அய்யன் இப்படிக் கேட்டதும் பஞ்சு ஒரு மாதிரியாகி விட்டாள். முத்துலட்சுமிக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்பதை அவர்களிடம் எப்படி சொல்வது?
அறைக்குள் இருந்த முத்துவின் மனமோ துடித்தது. “பஞ்சு சொல்லு ..!எங்கப்பன்… ஆத்தா கிட்ட என் ஆசையைச் …சொல்லு சொல்லு”.என்று அலறியது.
பஞ்சுவின் முகத்தைப் பார்த்த பாப்பம்மா ‘ ஏதோ ஒரு விஷயத்தை மனம் திறந்து சொல்ல முடியாமல் தவிக்கிறாள்’ என்பதை புரிந்து கொண்டு விட்டாள்.
“பஞ்சு…. என்னத்தையோ சொல்ல வர்றே …சொல்ல முடியாம சங்கடப்படுறே……நீ யாரையாவது மாப்ள பாத்து வச்சிருக்கியா என்ன?”
“நான் பாக்கல மதினி!”
“பின்னே வேறு யாரு பாத்திருக்கா?”
“முத்துதான்!”
அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி. அறைக்குள் இருந்த முத்துவோ அப்போதுதான் நிம்மதியாக பெரு மூச்சு விட்டாள். இனி என்ன நடந்தாலும் சரி என்கிற மாதிரி மனசிலிருந்த பாரம் குறைந்திருந்தது.
அய்யன் ஆத்திரமுடன் பஞ்சுவைப் பார்த்து ” முத்து…மாப்ள பாத்திருக்காளா…என்ன சொல்றே நீ ” என்று சத்தம் போட்டார்.
“சத்தியமா எனக்கு எதுவும் தெரியாதுண்ணே…. முத்துதான் வூட்டுக்கு வந்து நீங்க மாப்ள பாத்திருக்கிற சங்கதியச் சொல்லிட்டு அவளுக்கு இஷ்டம் இல்லேங்கிறத சொன்னா. அவளுக்கு சந்தனக்கட்டை வீரப்பன் மேல ஆசை. அவருக்கும் நம்ம முத்து மேல இஷ்டம். ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்து பேசி இருக்காங்க.ஆனா தப்புத்தண்டா எதுவும் நடந்துறல” என்றதும் தரையை ஓங்கி மிதித்த அய்யன் பட்டியல் கல்லை விட்டு வேகமாக எழுந்தார்.
“எங்கே இருக்குறா?” என்று ஆவேசத்துடன் வீட்டுக்குள் பாய்ந்தபோது யாருமே எதிர்பார்க்கவில்லை ,அங்கு வந்து வீரப்பன் நிற்பான் என்பதை!
“அய்யா கோவமா இருக்காக போலிருக்கு!” உள்ளே வந்த வீரப்பன் பட்டியல் கல் ஓரமாக உட்கார்ந்தான்.ஆத்திரம் எங்கே போனதோ…தெரியவில்லை.பாப்பம்மாவும் ,பஞ்சவர்ணமும் படக் கென்று முத்து இருந்த அறைக்குள் போய்விட்டனர்.
என்ன நடக்கபோகுதோ என்ற அச்சத்துடன் பாப்பம்மா கதவோரமாக நின்று கொண்டாள்.
“அய்யா..கும்புடுறேன் நாந்தான் வீரப்பன்.” உட்கார்ந்திருந்தவன் கை குவித்தான்.
கரு கருவென அடர்த்தியான கர்லிங் முடி.!பொசு..பொசுவென வளர்ந்திருந்த மீசை..இலைப்பச்சை நிறத்தில் யூனிபார்ம்.இடைக்குள் மறைந்திருந்த ரிவால்வார்.காட்டு இலாகா உத்தியோகஸ்தர் மாதிரியான தோற்றம்.
நேருக்கு நேராக பார்ப்பதற்குத் தயங்கிய அய்யனும் பதில் வணக்கம்போட்டுவிட்டு “என்ன விசயமாக வந்தீக?”என்றார்.
“நல்ல விசயம் பேசத்தான் வந்திருக்கேன்.நீட்டி நெளிச்சி பேச விரும்பல. கட்டன்ரைட்டாகப் பேசிப்பிடறதுதான் இந்த வீரப்பனோட பழக்கம். உங்க மக முத்துலட்சுமிய நா விரும்பறேன்.அந்த பிள்ளையும் என்னை விரும்புது.கண்ணாலம் கட்டிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம். உங்க சம்மதம் தேவை”.
அய்யன் அச்சத்துடன் “எங்க சொந்தத்துல மாப்ள பேசி முடிச்சிருக்கேன்.இப்படி திடு திப் புன்னு வந்து பொண்ணு கேட்டா என்ன பண்றது? வாக்கு தவற மாட்டான் அய்யன்கிறது ஊருக்கே தெரியும் அத கெடுத்துக்க முடியுமா.நாலும் தெரிஞ்சவர் நீங்க”என்று சொல்லி முடித்தார்.நடுக்கம் தெரிந்தது குரலில்!
அருகில் நெருங்கிய வீரப்பன் அவரின் தோள் மீது கை போட்டுச்சொன்னான்.
“உங்க முடிவ நீங்க சொல்லிட்டீங்க.என் முடிவ…..இல்ல…உங்க மகளுக்கும் சேத்து சொல்றேன்.எங்க முடிவ இப்ப சொல்லிடுறோம்.நாங்க ரெண்டு பேரும் புருஷன் பொஞ்சாதியா வருவோம்.உங்க ஆசிர்வாதம் தேவை. சந்தேகமிருந்தா முத்துக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்குங்க.வர்றன்யா…வர்றன்மா”
எல்லோருக்கும் பொதுவாக ஒரு கும்பிடு போட்டு விட்டு வெளியேறினான் வீரப்பன்.
நாளை மீண்டும் …