மறைந்தமுன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இன்று நடந்தது.இப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது,
“அதிமுக கொடியில் அண்ணாவின் உருவத்தை பொருத்தியவர் எம்.ஜி.ஆர். அன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் மூலம் ஆக்கப்பூர்வமான கருத்துகளை சமுதாயத்தில் எம்.ஜி.ஆர். புகுத்தினார். தற்போது ஏதேதோ தலைப்புகளில் எல்லாம் திரைப்படங்கள் வருகின்றன, ஆனால்,ஒரு படம் கூட மனதில் நிற்பதில்லை.இன்றைய படங்கள் அன்றைய எம்.ஜி.ஆர் படங்களைப் போல உயிரோட்டம் இல்லை. திரைப்படங்களின் வாயிலாக ஆக்கப்பூர்வமான கருத்துகளை சமுதாயத்தில் எம்ஜிஆர்.புகுத்தினார். ஆனால் இன்றைக்கு வருகின்ற திரைப்படங்களை பார்த்தாலே பிள்ளைகள் கெட்டுப் போய் விடுவார்கள்
கூட்டணி கட்சிகளை எந்த காலத்திலும் திமுக மதித்தது கிடையாது. திமுகவுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் கட்சி பரிதாபமான நிலைக்கு சென்றுவிட்டது.திமுகவில் கலைஞர் கருணாநிதிக்கு பிறகு அவரது மகன் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண நபர் திமுகவில் உயர்ந்த பதவிக்கு வர முடியுமா? நான் முதல்வர் ஆவேன் என்று எண்ணினேனோ. இல்லை, இன்று முதல்வராகி இருக்கிறேன். அதேபோல் இங்கே இருக்கிறவர்களும் ஒரு காலத்தில் உயர்ந்த இடத்திறகு வர முடியும். அது அனைத்து இந்திய அண்ணா திராவிட முனனேற்ற கழகத்தில் மட்டும் தான் நடக்கும். வேறு எந்த கட்சியிலும் நடக்காது.
அதிமுகவில் உள்ள அனைவரும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும். அதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே முதல்வர் ஆவதற்கான தகுதி உடையவர்கள். ஒரு பழனிசாமி அல்ல. ஓராயிரம் பழனிசாமிகள் அதிமுகவில் உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.