மத்திய அரசு பட்ஜெட்டை தொடர்ந்து இன்று காலை துணை முதல்வர் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இப் பட்ஜெட் குறித்து நடிகரும், மக்கள் நீதிமய்யக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையின் விபரம் வருமாறு,
“வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை என்கின்ற திருக்குறளுடன் தங்களது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்த ஆளுங்கட்சியின் வினை ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டின், தமிழ் மக்களின் வளங்களை வாரிச் சுருட்டி செல்வது போல உள்ளது.
2000 ஆண்டில் திமுக ஆட்சியின் முடிவில் தமிழகத்தின் மீதிருந்த கடன் தொகை சுமார் ரூ.28,685 கோடி, அது 2006 ஆண்டில் அதிமுக ஆட்சியில் சுமார் ரூ.57,457 கோடியாக உயர்ந்து,
மீண்டும் 2011 ஆண்டில் திமுக ஆட்சியில் சுமார் ரூ.1,01,439 கோடியாக மாறியது, கடந்த 2016 ஆண்டில் அதிமுக ஆட்சியில் சுமார் ரூ.2,52,431 கோடியாக உயர்ந்து.
தற்போது அதிமுக அரசு இந்த ஆட்சிக் காலத்தில் தான் தாக்கல் செய்யும் தனது கடைசி பட்ஜெட்டில் கடன் தொகை சுமார் ரூ.4,56,660 கோடியாக மாறியிருக்கிறது.
கடந்த இருபது ஆண்டுகளில் ஆண்ட ஆளுகின்ற திமுக மற்றும் அதிமுக அரசு பொறுப்பற்ற முறையில் கடைப்பிடித்த நிதி நிர்வாகத்தின் காரணமாக ஒவ்வொரு தமிழரின் தலையின் மீதும் சுமார் ரூ.57,500 கடன் சுமையாக நிற்கிறது.
தமிழர்கள் ஒவ்வொருவரையும் கடனாளியாக மாற்றிய ஒன்று தான் இந்த இரு அரசுகளின் சாதனை.
எனவே தான் மக்கள் நீதி மய்யம் கட்சி இந்த இரண்டு கட்சிகளும் அகற்றப்படவேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறது.ஆட்சி காலத்தின் கடைசியில் இருக்கும் காரணத்தால் “மக்களை கவரும் திட்டங்களிலும்” “செயல்படுத்த முடியாத அறிவிப்புகளையும்” நிதி ஆதாரத்தை பற்றிய எவ்வித கவலையும் இல்லாமல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறது இந்த அரசு.
இனி இவர்களிடம் குறை தேடி பயனில்லை. மக்கள் மாற்றத்தை தேடுவதே தீர்வாகும்.
உங்கள் நான்” இவ்வாறு அறிக்கையில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.